உலகின் முதல் முட்டாள்கள் ஊடகவியலாளர்கள்! – (கனகரவி)

PHOTO JOURNALISTS

கையில் ஒளிப்படக்கருவி
எழுதுகோல்
காணொளிக்கருவி
துணைக்கு வைத்திருக்கும்
உலகின் முதல் முட்டாள்கள்
ஊடகவியலாளர்கள்!

அதனால் தானோ தெரியவில்லை
பயங்கரவாதிகள்
போதைப்பொருள் கடத்தல்காரர் – என்பதை
கேட்டுவிட்டும்
பேசாமடந்தைகளாயிருக்க வேண்டும்!

குண்டு வெடிக்குமிடத்திலிருந்து
உயிரைக்காப்பாற்ற ஓடுவார்கள்
ஓடுவார்கள் ஊடகவியலாளர்
குண்டுவெடித்த இடத்தை நோக்கி – அப்பொழுது
உலக முட்டாள்களாகத் தானவர்கள்!

பதின்ம வயதை எட்டாத பாலகிகளை
பாலுணர்வின் இச்சை தீர்க்கும்
போர்க்கருவியேந்தியவன்
சோறள்ளி வைக்குமவளின் வாயில்
வைப்பான் அவன் குறியை..!
அப்பொழுது அதனை வெளிப்படுத்தியவன்
முட்டாள்தானோ?

புழுதிகுடித்து மழையில் உடலூறி
அணிந்த ஆடையுடன்
பத்துநாள் வெளியில் திரிந்து
இரவில் விழித்திருந்தாலே காலையில்
செய்திவழங்கலாமென நினைப்பவன்
முட்டாள் தான்…!

ஒரு ஊடகனின் வீட்டின்
முன்வாயிலில் கல்லெறிந்த நிகழ்வால்
அன்றோடு தொழிலை விட்டவனிருக்க
சுடுகுழலை நீட்டியவன்
உயிரைக் குடிப்பேன் என்றபின்னும்
நாள்தோறும் செய்திதருபவன்
வெகுமக்களின் உறவக்காரனாயிருப்பதால் – அவன்
உலக முட்டாள் தான்?

நட்புடன் – கனகரவி